பீகாரில் தனிமையில் இருக்கும் பெண்களுக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்து வந்த சீரியல் கிஸ்ஸர் முகமது அக்ரமை போலீஸார் கைது செய்தருக்கிறார்கள்.
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்திலுள்ள சதார் மருத்துவமனையில் சுகாதார பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, மருத்துவமனைக்குள்ளே சுவர் ஏறி குதிக்கும் நபர் ஒருவன், அப்பெண்ணுக்கு பின்புறமாக வருகிறான். திடீரென முன்பக்கமாக வந்த அந்த நபர், அப்பெண்ணை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கிறான். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் சுகாதார பணியாளர் சுதாரிப்பதற்குள், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஜமுய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, மீடியாக்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது, “அந்த நபர் யாரென்று எனக்குத் தெரியாது. அதேபோல, அவர் ஏன் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தார் என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்கு அந்த நபர் முத்தம் கொடுத்ததும், அதிர்ச்சியடைந்து உதவிக்காக உடனடியாக மருத்துவமனை ஊழியர்களை அழைத்தேன். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோயும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே, இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த நபர் இதேபோல பல்வேறு இடங்களிலும் பல பெண்களுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சீரியல் கில்லர் போல, இந்த நபர் சீரியல் கிஸ்ஸர் என்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில், பெண்களுக்கு முத்தமிட்டது முகமது அக்ரம் என்பது தெரியவந்தது. இவன், ஏற்கெனவே பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவன். இதைத் தொடர்ந்து, முகமது அக்ரமும், அவனது கூட்டாளிகளும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.