பெ. மா. மதுரைப் பிள்ளை | சுதந்திரம்75

பெ. மா. மதுரைப் பிள்ளை | சுதந்திரம்75

Share it if you like it

பெ. மா. மதுரைப் பிள்ளை

ரங்கோன் மதுரைப் பிள்ளை என சொல்லிடும் போது, ஏதோ கடல் கடந்து, இத்தமிழ் மண்ணுக்கு வந்தவராக, அவரை எவரும் நினைத்திரக் கூடாது.  1858-இல், முப்புறமும் உப்பு நீரால் சூழப்பட்ட இச்சென்னை மாநகரில், தொழிலதிபர் திரு. மார்க்கண்ட மூர்த்தி -அம்மணியம்மாள் தம்பதியினருக்கு, இரண்டாவது மைந்தனாக, 1858 ல், திசம்பர் 26 ஆம் நாள், மதுரைப் பிள்ளை பிறந்தார். 

இன்று, சென்னை வேப்பேரியிலுள்ள, சென்பால்ஸ் ஐ ஸ்கூல் தான், அன்று எஸ்.பி.ஜி. பள்ளியாக இருந்தது.  அந்தப் பள்ளியில் தான், அவரது இளமைக் கல்வி இனிதாக முடிந்தது.  அதன் பின், ரங்கோனிலுள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார்.  தமது கல்லூரிப் படிப்பை, சென்னை கிறிஸ்டியன் காலேஜில் பயின்றார்.

1877-இல், சென்னை மாநில கவர்னர், பக்கிங்ஹாம் பிரபுவின் நேர்முக எழுத்தராக இருந்து பணியாற்றினார்.  அவரது தன்னல மறுப்பும், தளராத உழைப்பும், அவரை ‘ரங்கோன் ஸ்ட்ராங் ஸ்டீல்’ என்ற அமைப்பில் பணியாற்ற வைத்தது.  அவர் ஒழுக்கம் நிறைந்தவராகவும், உயர்ந்த பண்புள்ளவராகவும், நன்னடத்தை மிக்கவராகவும், நம்பிக்கை உள்ளவராகவும் சிறந்து விளங்கினார்.

அன்றைய  ஆதிதிராவிட மகாஜன சங்கத்தில், முக்கியத் தொண்டர்களாக இருந்து, சமுதாயத்திற்கு சிறப்பாக உழைத்தவர்கள், புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மதுரை வாசகம், ஜார்ஜ் டவுன் மகிமை தாஸ் பத்தர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.  இந்த மகாஜன சங்கத்தின் போஷகராக இருந்த மதுரைப் பிள்ளை அவர்கள், சமூக உழைப்பிற்கும், ஊழியத்திற்கும், உன்னத மதிப்பும், மரியாதையும் தந்து, சமூக ஊழியர்களை ஊக்குவிப்பதில், உற்சாகப் படுத்துவதில், மிக வல்லவர்.

அறிவுக்கு ஊக்கம் தரும், நல்ல பல கதைகளை அச்சிட்டு, இலவசமாக மக்களுக்கு வழங்கினார், இவ்வணிக வேந்தர். கல்வி அறிவு, பட்டியலின மக்களுக்கு மிக அவசியமானது என்பதை உணர்ந்து, ஒரு உயர்நிலைப் பள்ளியை, கட்டினார்.  பட்டியலினத்தவரின் கல்விக் கண்ணைத் திறந்து, அவர்களைப் படிக்க ஊக்கமூட்டினார்.

வியாபார நிமித்தமாக லண்டன், ஜெர்மன் உள்ளிட்ட உலகில் உள்ள பெரும் நகரங்களுக்கு சென்று, மிகப்பெரும் தொழில் அதிபராக, உச்சத்தில் நின்றார். 1885 இல், ரங்கூன் நகர கவுரவ நீதிபதியாகவும், 1880 இல், ரங்கூன் மாநகர கமிஷனராகவும், ஏறத்தாழ 30 ஆண்டுகள், மக்களின் நன்மதிப்பை பெற்று, அப்பதவியில் தொடர்ந்து இருந்தார். எவரும் குற்றம் கூற முடியாதபடி, அவரது சேவை இருந்தது.

பல மேல் நாடுகளுக்குச் சென்று, அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரில் கண்டு வந்தவர்.  ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, வேல்ஸ், டென்மார்க், நார்வே, இத்தாலி, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல, நம் மக்களும் வாழ்ந்திட வேண்டும் என்கிற பெரும் ஆர்வம், அவருக்கு அதிகம் உண்டு.

அவரது வருவாயில் ஒரு பகுதியை, இந்து கோயில்களுக்கு என, நிரந்தரமாக கொடுத்து வந்தார். ஒரு கோயிலும் கட்டினார்.  எண்ணற்ற ஏழைகள், பழங்குடி, பட்டியலின மக்கள் திருமணங்களை, அவரே செலவு செய்து, முடித்து வைத்திருக்கிறார்.  எனவே தான், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்கு, 1906-இல் அவர் அறிமுகம் செய்விக்கப் பட்டார்.  சக்கரவர்த்தி பெருமிதத்தோடு, ‘சிறந்த பொதுத் தொண்டர்’ என பாராட்டினார்.

சமூகப் பெரியோர்களுக்கும், வறுமையில் வாடும் மக்களுக்கும், உதவிகளை செய்ததோடு, மருத்துவ வசதியும் செய்துள்ளார். பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். மதுரைப் பிள்ளை அவர்கள் வழங்குவதையே தன் தொழிலாகவும், கடமையாகவும் கொண்டிருந்தார் என்பது, மிகையே ஆகாது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய ‘மதுரைப் பிரபந்தம்’ என்ற நூல் ஒன்று, அவர் புகழ் பாட இன்றும் நிலவுகிறது.

1912 இல் ஒரு புதிய கப்பலை வாங்கினார், ‘மீனாட்சி’ என்ற தனது மகளின் பெயரை சூட்டினார். 1913 ஆம் ஆண்டு, சூலை 15 நாள், கொடை வள்ளல் மதுரைப் பிள்ளை மரணமடைந்தார், அவரது மரணத்தை அறிந்த ரங்கூன் அரசு, விடுமுறை அறிவித்தது, பல்லாயிரக்கணக்கான மக்கள், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Share it if you like it