நமது நாட்டின் 78 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சுதந்திர தினத்தன்று கேரளாவில் ஒரு இடத்தில் கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை மக்கள் முன்னிலையில் ஒருவர் ஏற்றுகிறார். அப்போது கொடியானது கொடி கம்பத்தில் சிக்கி கொள்கிறது. இதனால் கொடி ஏற்றியவர் கொடியை சிக்கலில் இருந்து எடுத்து பறக்க வைக்க முயல்கிறார்.ஆனால் அவரால் முடியவில்லை. அப்போதுதான் திரைப்படங்களில் ஆபத்தில் மக்கள் இருக்கும்போது அதிரடியாக வந்து காப்பாற்றும் ஹீரோ போல், ஒரு பறவையானது மிக அழகாக பறந்து வந்து கொடி கம்பத்தில் சிக்கியிருந்த தேசியக் கொடியை அவிழ்த்து பறக்க வைக்கிறது. அதிலிருந்து பூக்கள் சிதறி குழந்தைகளின் மீது விழ தான் வந்த வேலை முடிந்துவிட்டது என மிக அழகாக அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. இந்த காணொளி பார்ப்பவர்களை பரவசமடைய வைக்கிறது.
காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை என்று மகாகவி பாரதியார் பாடி சென்றுள்ளார். எங்கள் நாட்டில் இருக்கும் பறவைகளுக்கு கூட தேசத்தின் மீது காதல் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.