ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹீர்போராவில் சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரான ஐஜாஸ் அகமது ஷேக் சுடப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு பல ஜம்மு & காஷ்மீர் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்தனர். பிஜேபி பிரமுகர்கள் ஷேக்கை கட்சியின் “துணிச்சலான சிப்பாய்” என்று குறிப்பிட்டனர்.
இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அதற்குப் பிறகு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளால் ஏற்பட்ட வன்முறை கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி இதனால் உயர்ந்து உள்ளது.
தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற பொழுது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி(BYJM) தலைவர் ஐ ஜாஸ் அகமது ஷேக் அவர்கள் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மாநிலம் முழுமையாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று பேசியுள்ளார். இதை பொறுத்து கொள்ள முடியாத பயங்கரவாதிகள் அவரை படுகொலை செய்துள்ளனர்.
தற்போது தான் காஷ்மீர் மாநிலம் வன்முறை கலவரங்கள் ஏதுமற்று அமைதியாக இருக்கின்றது.இது போன்ற படுகொலைகள் காஷ்மீரை பழைய நிலைமைக்கு எடுத்துச் செல்லும் என பயங்கரவாதிகள் கனவு காண்கின்றனர்.இன்னும் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் வாலாட்டிக் கொண்டிருக்கின்ற பயங்கரவாதிகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.