கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே அரசியல் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக மாநில அரசின் மீது மத்திய அரசு குற்றச்சாட்டை வைத்தது.
முதலாவதாக, ஜூலை 6-ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் சி. பாலசுப்ரமணியன் காலை நடைப்பயணத்திற்கு வெளியே சென்றபோது திமுக அமைச்சர் பி.டி.தியாகராஜன் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சிவகங்கை அருகே பா.ஜ.க-வின் மாவட்டப் பொறுப்பாளர் செல்வகுமார் சனிக்கிழமை இரவு கொல்லப்பட்டார். கன்னியாகுமரியில் டிசம்பர் மாதத்தில் வாகனம் ஓட்டுவது தொடர்பான தகராறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சனை 6 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் கடலுார் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் நவீதம் நகரைச் சேர்ந்த பத்மநாபன், அதிகாலையில் காரில் வந்த கும்பலால் கொல்லப்பட்டார். இவர் கடலுார், 25வது வார்டு அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்தார்.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வகுமாரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் வசந்த குமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுப்பட்டி கிராமத்தில் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்தை காண்பிப்பதற்காக, குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது சார்பு ஆய்வாளர் பிரதாப்பை தாக்கிவிட்டு வசந்த குமார் தப்ப முயன்றார்.
இதைக்கண்ட ஆய்வாளர் மணிகண்டன், வசந்தகுமாரை துப்பாக்கியால் காலில் சுட்டார். இதையடுத்து காயம் அடைந்த வசந்தகுமாரும், சார்பு ஆய்வாளர் பிரதாப்பும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் பல அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் , கடலூரில் அதிமுக பிரமுகர் பத்மநாதன், கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன், சிவகங்கையில் பாஜக நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன.