உளவுத்துறையின் தோல்விக்கு காரணம், அந்த அமைப்பில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதுதான் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பகீர் தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறது.
தமிழக உளவுத்துறையின் ஏ.டி.ஜி.பி.யாக இருப்பவர் டேவிட்சன் தேவாசீர்வாதம். இவர் மீது சமீபத்தில் போலி பாஸ்போர்ட் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இந்த விவகாரம் தமிழக காவல்துறையில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சற்றே தணிந்து வந்த நிலையில், கோவை நகரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ம் தேதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக முதலில் கருதப்பட்டாலும், காருக்குள் சிதறிக் கிடந்த ஆணிகள் மற்றும் கோழி குண்டுகள் ஆகியவை இது ஒரு பயங்கரவாத சதி என்பதை காட்டிக் கொடுத்தது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தில் தமிழக உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இது ஒரு பயங்கரவாத சதி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கு ஆளும்கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, தமிழக உளவுத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், இதன் காரணமாகவே உளவுத்துறை தோல்வியடைந்து விட்டது எனவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அப்பேட்டியில் அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு ஒரு அஜென்டாவை கொடுத்து விட்டது. அதன்படி, உளவுத்துறையில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் அமர்த்தினார்கள். மேலும், தென் தமிழகத்தில் ஏதோ ஒன்றை ஊக்குவிப்பதற்காக, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு ஒரு அஜென்டா ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு கிறிஸ்தவ மிஷனரிகளிடம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதற்காக, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை உளவுத்துறையில் முக்கிய பதவிகளில் நியமித்தார்.
பின்னர், இவர்களுடைய துணையுடன் தென் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பைபிளை கொடுத்து படிக்கச் சொல்லி மதம் மாற்றம் செய்ய முயற்சி நடந்தது. இது ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிரிங் ஆபரேஷன் மூலம் வெட்ட வெளிச்சமானது. அதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை மூடி மறைக்க முயன்றார்கள். ஆக மொத்தத்தில் தமிழகத்தில் நடந்த மதமாற்றம் தொடர்பான விவகாரங்களில் தமிழக உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் உளவுத்துறை மூலம் மதமாற்றம் நடப்பதாக அண்ணாமலை கூறியிருக்கும் தகவல் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.