மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு பொங்கும் எதிர்க்கட்சிகள், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு பொங்காதது ஏன் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4-ம் தேதி, பழங்குடி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி, நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. பிரதமர் மோடியும், மணிப்பூர் மகள்களுக்கு நடந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அதேசமயம், மணிப்பூர் மாநிலத்தில் நடந்தது போல, மேற்குவங்க மாநிலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் பஞ்ச்லா கிராமத்தில் அண்மையில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தது. அப்போது, பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹிமந்தா ராய் உள்ளிட்டோர் தாக்கி, அப்பெண்ணின் ஆடைகளை அகற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்று மானபங்கம் செய்திருக்கிறார்கள்.
இச்சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதை சுட்டிக்காட்டி மணிப்பூருக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், மேற்குவங்க சம்பவத்தை கண்டிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன். . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் மால்டா எனும் இடத்தில் 2 பழங்குடி இன பெண்களை நிர்வாணமாக்கி, இரக்கமில்லாமல் தாக்கிய காட்சிகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து ஏராளமான கண்ணீர் வடிக்கிறார். ஆனால், தனது மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து அமைதியாக இருக்கிறார். இது மேற்கு வங்க முதல்வராக அவரது தோல்வியை அம்பலப்படுத்துகிறது. அதேபோல, I.N.D.I.A. கூட்டணியில் இருந்து எந்தத் தலைவரும் இச்சம்பவத்தை கண்டிக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பில் எந்த தீவிரமும் இல்லை. இது வெறும் பிரசார அரசியலையே காட்டுகிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.