சுப்பிரமணிய சுவாமி எல்லாம் ஓல்டு இந்தியா. அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. இனியும் என் வாழ்நாள் முழுவதும் சந்திக்கவும் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த சுப்பிரமணிய சுவாமி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலையை தமிழகத்தின் சிங்கம் என்று சொல்கிறார்கள். அவரது எழுச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, அண்ணாமலை யாரு? என்று நக்கலாக கேட்டார். அவர் தமிழக பா.ஜ.க. தலைவர் என்று செய்தியாளர்கள் சொல்ல, தமிழகத்தில் பா.ஜ.க. இருக்கிறதா? என்று மீண்டும் கிண்டலாக கேட்டதோடு, தமிழகத்தில் நான் பா.ஜ.க.வை பார்த்ததில்லை. பின்னர் அவரை எப்படி பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
சுப்பிரமணிய சுவாமியின் இந்த பதிலை தி.மு.க.வினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அண்ணாமலையை கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில், கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பெரியவர்களை தரக்குறைவாகப் பேசுவது எனக்கு பிடிக்காது. சுப்பிரமணிய சுவாமி எல்லாம் ஓல்டு இந்தியா. நான் இதுவரை சுப்பிரமணிய சுவாமியை சந்தித்ததில்லை. இனியும் வாழ்நாள் முழுவதும் நான் சுப்ரமணிய சுவாமியைசந்திக்கவும் போவதில்லை. எனக்கு எந்த காட் ஃபாதரின் ஆதரவும் தேவை இல்லை. நான் காலில் விழுந்து வணங்கினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், அப்படியொரு ஏற்பு எனக்குத் தேவையே இல்லை” என்று நேரடியாகவே பதிலடி கொடுத்திருக்கிறார்.