மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்ற மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. இம்மாநில முதல்வராக கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன் யாதவ் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
அப்போது, பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமர், எதிர்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், பேரவைத் தலைவராக தோமரை தேர்ந்தெடுப்பதற்கான முன்மொழிவை எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் முன்மொழிந்தார்.
தொடர்ந்து, எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜய் சிங், ஜெய்வர்தன் சிங் மற்றும் ராஜேந்திர குமார் சிங் உட்பட மேலும் 5 முன்மொழிவுகளும் தோமருக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டன. பின்னர், குரல் வாக்கெடுப்புக்குப் பிறகு தற்காலிக பேரவைத் தலைவராக கோபால் பார்கவாவும், பேரவைத் தலைவர் பதவிக்கு தோமரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர சிங் தோமருக்கு, முதல்வர் மோகன் யாதவ் வாழ்த்து தெரிவித்தார். அதோடு, பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததற்கு எதிர்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.