நேற்று குரு பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் ‘கு’ என்றால் இருட்டு எனப் பொருள்.’ரு’ என்றால் விரட்டுதல் எனப் பொருள்.அறியாமையாகிய இருட்டை விலக்கி ஞான ஒளியினை ஏற்படுத்துபவரே குருவாவார். ஒரு சிஷ்யனின் வாழ்க்கை பாதையை சீர் செய்து அவனுக்கு ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோட்சம் பெரும் அளவிற்கு கொண்டு செல்பவர் குரு. வியாச பூர்ணிமா கொண்டாடப்படும் இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.
‘வேத வியாசர்’ எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் ‘வேதவியாசர்’ என்றழைக்கப்பட்டார். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.
இந்தகைய பெரியோரின் பிறந்த தினமே குரு பூர்ணிமா. இந்த நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. குரு பூர்ணிமா அன்றே வியாசர் பிரம்ம சூத்திரத்தை எழுதி முடித்தார். இந்த நாளில் பிரம்ம சூத்திரத்தை பாராயணம் செய்து வியாசரை வேண்டினால் இம்மையில் நல்லறிவு உண்டாகும்.
இந்த நிலையில் குருபூர்ணிமா விழாவை மீனவர்கள் மத்தியில் கோவளத்தில் வியாச விழாவாக நடைப்பெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில செயலாளர் திரு.அஸ்வத்தாமன் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.