தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதாகக் கூறி அக்கட்சியின் நிர்வாகியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அரிவாளால் வெட்டி இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், தமிழகம் இன்னொரு மேற்குவங்கமாக மாறி வருகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பா.ஜ.க.வினரை குறிவைத்து திரிணாமுல் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதில், ஏராளமான உயிர்ப்பலி ஏற்பட்டதும் கவனிக்கத்தக்கது. அதேபோல, சமீபத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை வீட்டோடு தீவைத்து எரித்துக் கொன்றனர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர். இச்சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அடக்கி வாசித்து வந்த ரவுடிகளும், குண்டர்களும் தற்போது சுதந்திரமாக நடமாடத் தொடங்கி விட்டனர். பொதுவாகவே, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் வன்முறை தலைவிரித்தாடும் என்றாலும், இந்த முறை அதிகளவில் அரங்கேறி வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம் என்ற ரவுடிகள் மற்றும் குண்டர்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தி.மு.க.வினராகவும், அதன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களுமாகவே இருக்கின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மீது இக்கும்பல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்து குண்டர்கள். கடலூர் கிழக்கு மாவட்டம் வடக்குத்து குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தை சேர்ந்தவர் பாபு. பா.ஜ.க.வில் மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், நேற்று இரவு 8 மணியளவில் பாபு சரிமாரியாக தாக்கி இருக்கிறார்கள். மேலும், அரிவாள், கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி இருக்கிறார்கள். இதில், பாபு மயக்கமடைந்து சரியவே, அவர் இறந்து விட்டதாகக் கருதி தப்பிச் சென்று விட்டது அக்கும்பல். ஆனால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். இதன் மூலம், தமிழகம் இன்னொரு மேற்குவங்கமாக மாறி வருகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.