அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான காரணத்தையும் அது வெளிப்படுத்தி உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக பாஜக வெற்றி பெற்ற நிலையில் வரும் தேர்தலிலும் வாகை சூடி ஹாட்ரிக் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து இப்போது இருந்தே தேர்தல் பணியை தொடங்கி விட்டது.
மாறாக பாஜகை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ‛இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் ஒன்றாக கைகோர்த்துள்ளன. இத்தகைய சூழலில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என Fitch Ratings தெரிவித்துள்ளது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமாகும். இதுதொடர்பாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.
இந்தியாவில் 2024ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம். இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். இந்த அரசின் பரந்த கொள்கையை தொடர இது வழிவகுக்கும்.
இருப்பினும் பெரும்பான்மை பிடிப்பதற்கான எம்பிக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்வாக சீர்த்திருத்தம் என்பது மாறுபடலாம். பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரிய அளவில் ஆதரவு உள்ளது. மேலும் பல கருத்து கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என கணித்துள்ளன.