2024 மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இண்டியா கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 5 முதல் 23 வரை 543 மக்களவைத் தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கடந்த மக்களவை தேர்தலைக் காட்டிலும் இப்போது நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ல் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் இந்த எண்ணிக்கை 335-ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத் (26), மத்திய பிரதேசம் (29), ராஜஸ்தான் (25), ஹரியாணா (10), டெல்லி (7), உத்தராகண்ட் (5), இமாச்சல பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் 40 தொகுதிகளில் 17 இடங்களையும், ஜார்க்கண்டில் 14-ல் 12 தொகுதிகளிலும், ஒடிசாவில் 21-ல் 10 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் கட்சியாக உள்ள அசாமில் 14 தொகுதிகளில் 10 இடங்கள் அக்கட்சியின் வசமாகும்.
மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். திரிணமூல் காங்கிரஸ் கட்சி் 21 இடங்களைப் பெறும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.