பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், இந்த மாதம் 1 -ம் தேதி, திடீரென குண்டு வெடித்தது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடி குண்டு வெடிப்பு விவகாரத்தில், சிரியா நாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, குண்டு வைத்தவர் குறித்த தகவல் அளித்தால் ரூ.10.லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் என்.ஜ.ஏ. தெரிவித்தது.
இந்த நிலையில், குண்டு வெடிப்பு விவகாரத்தில், முக்கிய நபரை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. பெல்லாரியைச் சேர்ந்த டெட்டனு என்ற நபரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையில், டெட்டனு துணி வியாபாரம் செய்து வந்ததும், அதே வேளையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், டெட்டனு, குண்டு வெடித்த பின்னர், பெல்லாரி, தும்கூரு, பிடார் மற்றும் பட்கல் உள்ளிட்ட இடங்களுக்கு டெட்டனு சென்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.