பெங்களூருவில் உள்ள பிரபல, ‛ ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் நேற்று குண்டுவெடித்த வழக்கில் சந்தேகப்படும் நபர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரின் ‛ ஓயிட் பீல்ட் ‘ பகுதியில் உள்ள ‛ ராமேஸ்வரம் ஹோட்டலில்’ நேற்று மதியம் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த டிஜிபி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதில் குண்டுவெடிப்புக்கு காரணமான நபர் என சந்தேகப்படும் நபரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்தும், கண் கண்ணாடி, தொப்பி அணிந்தபடி அவர் நடந்து செல்வதும், ஹோட்டலுக்குள் செல்லும் அவர் பை ஒன்றை வைத்து விட்டு, குண்டுவெடிப்புக்கு முன்னரே கிளம்பி செல்வதும் பதிவாகி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், போலீசார் உறுதிப்படுத்தவில்லை.