அரசு நடத்தும் புத்தகக் கண்காட்சியில் இஸ்லாமியர்களின் புகழ் பரப்பும் ‘இன்ஷா அல்லா’ என்கிற திரைப்படத்தை ஒளிபரப்பும் முடிவு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்திலுள்ள முக்கிய மாவட்டத் தலைநகரங்களில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும். அரசுத் தரப்பில் நடத்தப்படும் இப்புத்தகக் கண்காட்சியை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்து நடத்தும். இப்புத்தகக் கண்காட்சியில் இடது மற்றும் வலது சாரி சிந்தினையுடைய புத்தகங்கள் உட்பட கவிதை மற்றும் நாவல் புத்தகங்களும் இடம் பெறும். தவிர, குழந்தைகளுக்கான கதை, கவிதை மற்றும் திறன் போட்டிகள், உணவு ஸ்டால்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், நிகழாண்டு பொருநை நாகரிகத்தை பறைசாட்டும் வகையில், இப்புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் பிப்ரவரி மாதம் தொடங்கி, மார்ச் 6-ம் தேதிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது திருநெல்வேலியில் மார்ச் 17-ம் தேதி தொடங்கிய பொருநை புத்தகக் காட்சி 27-ம் தேதிவரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சியில்தான் இஸ்லாமியர்களின் புகழ் பரப்பும் ‘இன்ஷா அல்லா’ என்கிற திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, புத்தகக் கண்காட்சிகளில் ஸ்டால்கள் மட்டுமே இடம்பெறுவது வழக்கம். மற்றபடி, எவ்வித காணொளிகளும் ஒளிபரப்பப்படுவதில்லை. ஆனால், நிகழாண்டு திருநெல்வேலியில் நடந்து வரும் பொருநை புத்தகக் கண்காட்சியில், குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில், வேடிக்கை என்னவென்றால், இக்கண்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து குறும்படங்களுமே இடது சாரி சிந்தனை கொண்டவையாக இருப்பதுதான். இதைவிடக் கொடுமை என்னவென்றால், இக்கண்காட்சியின் இறுதி நாளான மார்ச் 27-ம் தேதி இஸ்லாமியர்களின் புகழை பாடும் ‘இன்ஷா அல்லா’ என்கிற முழு நீள திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சமூக ஆர்வலர்கள், சாமானிய மக்கள், ஹிந்து அமைப்புகள் ஆகியோர் மத்தியில் கடும் அதிருப்பதியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு சார்பில், அரசு செலவில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் எப்படி இடது சாரி சிந்தனை கொண்ட குறும்படங்களையும், இஸ்லாமியர்களின் புகழைப் பாடும் திரைப்படத்தையும் ஒளிபரப்பலாம் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். ஆகவே, தமிழக அரசு உடனடியாக இதை வாபஸ்பெறும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வோண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மேலும், விருதுநகரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயது பெண்ணுக்கு நீதி கேட்டு நாளை நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி இருக்கின்றன.
