ஆவணங்கள் அடுக்கும் அலமாரியில் ஆல்கஹால்  : அவலத்தில் அரசு அலுவலகம் !

ஆவணங்கள் அடுக்கும் அலமாரியில் ஆல்கஹால் : அவலத்தில் அரசு அலுவலகம் !

Share it if you like it

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள, காடையாம்பட்டி தாலுக்காவில் பொட்டியபுரம் வருவாய் கிராமம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில், ஆவணங்கள் வைத்திருக்கும் பீரோவில் மது பாட்டில்களை வாங்கி வைத்து, அதை விடுமுறை நாட்களில் அலுவலகத்தைத் திறந்து வைத்து குடித்து வந்துள்ளார்.

மேலும் மது அருந்திவிட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இவரின் அருவருக்கத்தக்கச் செயல்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காடையாம்பட்டி வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய அந்த பகுதி மக்கள், “கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர். கணவரால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர் ஆகியோரிடம் இவர் வரம்பு மீறிப் பேசி வருகிறார். தகாத முறையில் நடந்து கொள்கிறார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


Share it if you like it