விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே இலுப்பைகுளம் சாலையில் இருந்து சொக்காயம்மன் கோயில் வரை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை சேந்தநதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் அஜித் குமார் என்பவர் முடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பணிக்கான தொகை விடுவிக்க ஒப்பந்தகாரரிடம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் ஜெயபுஷ்பம் ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு ஒப்பந்தகாரரான அஜித் குமார் ரூ.3,000 தருவதாக கூறிய நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மதித்துள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜித் குமார் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூ.3,000 லஞ்ச பணத்தை அஜித் குமார் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்திடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் மற்றும் சால்வன் துரை தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.