பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் ராஜானாமா செய்ததைத் தொடர்ந்து, இந்தியரான ரிஷி சுனக்குக்கு பிரதமராகும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் தலைவராக இருந்த போரிஸ் ஜான்சன், அந்நாட்டின் பிரதமராகவும் இருந்தார். ஆனால், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கன்சர்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை, கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும் என்பது விதிமுறை. ஆகவே, கட்சியின் தலைவர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ், நிதியமைச்சர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், லிஸ் டிரஸ் வெற்றிபெற்று பிரதமரானார்.
இந்த நிலையில்தான், பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவி ராஜினாமா செய்திருக்கிறார் லிஸ் டிரஸ். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வரிகளை நீக்கி உத்தரவிட்டார். ஆனால், இது பலனளிக்கவில்லை. மாறாக, பிரிட்டன் கரன்ஸியான பவுன்ட் சரிவை நோக்கிச் சென்றது. எனவே, தவறான வழிகாட்டிய நிதியமைச்சரை நீக்கி விட்டு, புதிய நிதியமைச்சரை நியமித்ததோடு, தனது தவறான செயல்பாடுக்காக பிரிட்டன் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். எனினும், அவருக்கு கட்சிக்குள் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அக்கட்சியின் எம்.பி.க்கள் பலரும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வந்தனர். எனவே, தனது பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜானாமா செய்து விட்டார்.
இதையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. ரிஷி சுனக் ஏற்கெனவே நிதியமைச்சராக இருந்ததால், அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிக்கிறது. கட்சியிலிருக்கும் 100 எம்.பி.க்கள் ரிஷிக்கு ஆதவாக பேசிவருகின்றனர். மேலும், நேற்றிலிருந்து #Readyforrishi என்ற ஹேஷ்டாக் உருவாக்கி டிரென்டாக்கி வருகின்றனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான கிரஹாம் பிராடி, தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறார். இம்மாதம் 31-ம் தேதி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்குள் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 24-ம் தேதி மதியம் 2 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு போட்டியாளருக்கு சுமார் 100 எம்.பி.க்களாவது ஆதரவு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில், மொத்தமுள்ள 357 எம்.பி.க்களுக்கேற்ப 3 போட்டியாளர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின்னர், அக்டோபர் 24-ம் தேதி மதியம் 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அன்று மாலை 6 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும். இதன் பிறகு, அக்டோபர் 28-ம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவியேற்றுக் கொள்வார். இத்தேர்தல் போட்டியில் தற்போது வரை வந்த தகவலின்படி, ரிஷி சுனக் முதல் இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.