சமீபத்தில் நடந்த பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து கியர் ஸ்டாமர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி அங்கு ஆட்சி அமைத்துள்ளது.
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ்-ஐ பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தார். இதையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பிரிட்டன் அரசர் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் ஸ்டாமர் உரை நிகழ்த்தினார். முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த ரிஷி சூனக்கின் பணிகளையும் அவர் பாராட்டினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து பொதுத் தேர்தலில் லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக ஷிவானி ராஜா தனது சமூக வலைதளபக்கத்தில், லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். கீதை மற்றது மாண்புமிகு மன்னர் சார்லஸுக்கு எனது விசுவாசத்தை சத்தியம் செய்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன், ”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஷிவானி ராஜா இந்தியாவின் குஜராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர். 1970 களின் பிற்பகுதியில் அவரது பெற்றோர் இந்தியாவிலிருந்து லெய்செஸ்டருக்கு குடிபெயர்ந்தனர். இவர் டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார், மருந்து மற்றும் அழகுசாதன அறிவியலில் பட்டம் பெற்றார், பின்னர் இங்கிலாந்தில் பல முக்கிய அழகுசாதனப் பிராண்டுகளுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.