நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘மகா விஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ரவி பேசினார்.
அப்போது பேசிய ஆளுநர் ரவி, திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல்கள் போலியானது என்றும், ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் பேசினார். இது தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:- ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்.
இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதன தர்மத்தின் கோட்பாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அழித்தனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது.
சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இந்த ஒற்றுமை இந்தியாவை அடிமைப்படுத்த சவாலாக இருந்தது. 1839 ஆம் ஆண்டு 90 ஆயிரம் மெட்ராஸ் மாகாண மக்கள் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதனத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பாக அய்யா வைகுண்டர் தோன்றினார். அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.