குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
பின்னர், அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் ஒவ்வொரு வழக்குக்கும் இது மாறுபடும் எனவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேவையில்லாமல் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அசன் முகமது ஜின்னா, அவ்வாறு எதுவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டாமென கோரிக்கை விடுத்தார். மேலும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதாகவும், தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, குண்டர் சட்டத்தில் அடைப்பதற்குப் பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டுமென தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறுவுறுத்தினர். மேலும், பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையத்தை அணுகும் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.