கனடாவில் காலிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1984-ல் புளூஸ்டார் நடவடிக்கை என்கிற பெயரில் சீக்கியர்களின் புனித தலமான பஞ்சாப் பொற்கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திரா காந்தி கொல்லப்பட்டார். இதன் பிறகு, சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, 1986-ம் ஆண்டில் காலிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டது. அதாவது, சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை ஒன்றாக இணைத்து, காலிஸ்தான் என்கிற பெயரில் சீக்கியர்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் என்பதுதான் இவரகளது கோரிக்கை. ஆனால், இந்திரா காந்தியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, அந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பலரும், போலீஸாரால் என்கவுன்ட்டர் என்கிற பெயரில் கொலை செய்யப்பட்டும், கைது செய்யப்பட்டும் வந்தனர். இதனால், அந்த இயக்கும் படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக காலிஸ்தான் இயக்கம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுபவர்களாகவும், போராட்டக்களத்தில் ஈடுபடுபவர்களாகவும் இந்த காலிஸ்தானியர்கள் இருந்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த அமைப்பினர் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகக் கூறி, சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற காலிஸ்தானி சார்பு குழு, 2019-ல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இந்த சூழலில்தான், தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தினர் கனடாவின் ஒன்டாரியோவில் காலிஸ்தானி அமைக்க வாக்கெடுப்பு பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதாவது, இந்த வாக்கெடுப்பு பஞ்சாப்பிலிருந்து தனிநாடு அமைக்க சீக்கிய சமூகத்தினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயலும் கோரிக்கையாகும். இதற்கு கனடாவில் உள்ள இந்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், கனடாவின் மிசிசாகாவில், கடந்த திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடியபோது, காலிஸ்தானி சார்பு குழுவுக்கும் இந்தியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. காலிஸ்தான் ஆதரவு குழு பதாகைகளை ஏந்தியபடி, ‘ராஜ் கரேகா கல்சா’ என்று கோஷங்களை எழுப்ப, பதிலுக்கு இந்தியர்கள் மூவர்ணக் கொடியை அசைத்தபடி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டடிருக்கின்றனர்.
காவல்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மோதல் கட்டுக்குள் வந்திருக்கிறது. இதனிடையே, காலிஸ்தானி சம்பந்தமான வாக்கெடுப்பு நடத்த கனடா அரசு எவ்வாறு அனுமதித்தது என்று இந்திய தரப்பு கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடிய உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, “கனடாவில் நாங்கள் அனைத்து மதத்தினரையும் நேசிக்கிறோம். கனடாவில் அனைத்து மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த பா.ஜ.க. தரப்பு, “இந்த சம்பவம் காலிஸ்தான் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி” என்று விமர்சித்திருக்கிறது. அதேசமயம், காலிஸ்தானிகளுக்கு கனடா ஆதரவு அளிக்கும் விதமாக நடந்திருப்பது இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தனது கண்டனத்தை கனடாவிடம் பதிவு செய்ய இந்தியா தயாராகி வருகிறது.