நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாணவர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், தற்போது அது தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் கேள்வி தாள் கசிவு தொடர்பாக பிகார் அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு நடத்த முடிவெடுத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுத மறுக்கும் மாணவர்கள் கருணை மதிப்பெண் இல்லாமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.