புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குடிநீர் விநியோகம் இல்லாததால், பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
அறந்தாங்கி அருகேயுள்ள திருநாளூர் வடக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ – மாணவிகள் 150 பேர் படித்து வருகின்றனர். மேலும், இவ்வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் சிறுவர்கள் 40 பேர் படித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக இவ்வளாகத்துக்கு குடிநீர் வரவில்லை. இதனால், மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு சமைப்பது சிரமமாக உள்ளது. கழிப்பிடத்தையும் பயன்படுத்த முடியவில்லை. எனவே, பள்ளிக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மாதர் சங்கத்தினர் கூறியது: திருநாளூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பள்ளிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நீர்தான், பள்ளி மற்றும் அங்கன்வாடியில் சமையல் செய்யவும், குடிநீராகவும், கழிப்பிடத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நீர் வராதாதல் சத்துணவு சமைப்பது பெரும் சிரமமாக உள்ளதுடன், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.