நல்லா கிளப்புறானுங்கய்யா பீதிய!?

நல்லா கிளப்புறானுங்கய்யா பீதிய!?

Share it if you like it

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ‘ஃபாஸ்ட் டேக்’ (Fast Tag) மோசடி குறித்த வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உண்மையில், இது சாத்தியமா?

தங்க நாற்கர சாலைத் திட்டம் வந்த பிறகு, டோல் கேட்களில் பணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்த சூழலில், நேரடியாக பணம் செலுத்தும் முறைக்கு பதிலாக ‘ஃபாஸ்ட் டேக்’ என்கிற முறை 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, ஃப்ரீ பெய்டு சிம் கார்டு போல முன்கூட்டியே பணம் கட்டி ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்டிக்கர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் எப்போது டோல் கேட்களை கடந்தாலும், அப்போது அந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்பட்டு, மேற்படி வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தாமாகவே கட்டணத்தை எடுத்துக் கொள்ளும்.

இந்த ‘ஃபாஸ்ட் டேக்’ முறையில்தான் மோசடி நடைபெறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வட மாநிலத்தைச் சேர்ந்த கார் ஒன்று, டோல்கேட்டில் நிற்கிறது. வழக்கமாக சிக்னல்களிலோ அல்லது டோல் கேட்களிலோ நிற்கும் கார்களின் கண்ணாடியை சிறுவர்கள் சுத்தம் செய்து விட்டு காசு கேட்பதுபோல, அந்த காரின் கண்ணாடியையும் ஒரு சிறுவன் துணியால் சுத்தம் செய்கிறான். ‘ஃபாஸ்ட் டேக்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் இடத்தில் சுத்தம் செய்யும்போது, அவனது கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தின் முன்பகுதி, ஸ்டிக்கரின் மேற்புறத்தில் படுமாறு கையை வளைத்துக் கொள்கிறான்.

இந்தக் காட்சிகளை காரின் உரிமையாளர் வீடியோ எடுக்கிறார். பின்னர், அந்த சிறுவன் காசு கேட்டு வரும்போது, கையில் இருக்கும் வாட்ச் பற்றி கேட்கிறார்கள். உடனே, அந்த சிறுவன் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறான். அவனை காரில் இருந்த ஒருவர் விரட்டிச் செல்கிறார். ஆனால், அந்த சிறுவனை பிடிக்க முடியவில்லை. தப்பிச் சென்று விடுகிறான். இதையடுத்து, அந்த காரின் உரிமையாளர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, “ஒரு கும்பல் ஸ்மார்ட் வாட்சால் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து பணத்தை திருடி வருகிறது” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோதான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் மேற்படி ஃபாஸ்ட் டேக் மோசடி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம், ஃபாஸ்ட் டேக்கில் மோசடி நடைபெறுவது சாத்தியமில்லாத ஒன்று என்று நிபுணர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ‘ஃபாஸ்ட் டேக்’ தயாரிப்பு நிறுவனமான பேடிஎம், ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது. அதில், “ஃபாஸ்ட் டேக்கில் மோசடி நடைபெறுவதை போன்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. தேசிய எலெக்ட்ரானிக் கட்டண வசூல் (NETC) விதிமுறைகளின் படி, அங்கீகாரம் பெற்ற வணிக நிறுவனத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும். பலகட்ட சோதனைகளுக்கு பிறகே, ஃபாஸ்ட் டேக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாதுகாப்பான சேவையாகும்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஒருங்கிணைக்கும் நிறுவனமான இந்திய தேசிய கட்டணம் செலுத்தும் கழகமும் (என்.பி.சி.ஐ.) இந்த மோசடி புகாரை மறுத்திருக்கிறது. இதுதொடர்பாக என்.பி.சி.ஐ. ட்விட்டரில் அளித்திருக்கும் விளக்கத்தில், “ஃபாஸ்ட் டேக் முறையில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை பொது இணையம் (ஓபன் இன்டர்நெட்) மூலமாக நடைபெறாது. மேலும், ‘ஃபாஸ்ட் டேக்’ ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும்போது, சில முன் அனுமதிகள் கோரப்படும். இதை நிவர்த்தி செய்த பிறகே கட்டணம் எடுக்கப்படும். இதற்காக பிரத்யேக ஸ்கேனர்கள் சுங்கச்சாவடிகளில் இருக்கும். மற்ற ஸ்கேனர்களை கொண்டு இதனை செய்ய முடியாது” என்று தெரிவித்திருக்கிறது.


Share it if you like it