விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய முறையில் சாதியை குறிக்கும் அந்த வார்த்தையை பயன்படுத்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தடை விதித்தது. தடையை மீறி அந்த வார்த்தையை பயன்படுத்துபவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தியது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சீமானிடம் கேட்டபோது, சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதால் என்மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த வார்த்தையை கருணாநிதி பலமுறை பேசியுள்ளார். அவர்மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.