மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து நீதிமன்றத்தில் வைத்தே சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
முன்னதாக நேற்று இரவு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்த சிபிஐ அதிகாரிகள், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்து விசாரிப்பது தொடர்பான ஆவணங்களை அவரிடம் வழங்கினர். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் வைத்தே அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
முன்னதாக இதே வழக்கில் ரோஸ் அவன்யூவில் உள்ள விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வெளியிட்டதை அடுத்து, வழக்கை அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாபஸ் பெற்றது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் கொண்ட அமர்வில் ஆஜாரான கெஜ்ரிவால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த ஜாமீனுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார்.
நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்தனர். இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனுக்கு விதித்த தடையை உறுதி செய்து வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்கிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இதுவரை சத்தியேந்திர ஜெயின், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறது.