இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 LCA தேஜஸ் மார்க் 1A போர் விமானங்களை ரூ.65,000 கோடி மேல் வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் டெண்டரை வழங்கியுள்ளது.
இதற்கு பதிலளிக்க அந்நிறுவனத்துக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உள்நாட்டு ராணுவ விமான கொள்முதலுக்கான மிகப்பெரிய ஒப்பந்தமாக அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது, இந்திய விமானப்படை தனது ‘மிக்-21’, ‘மிக்-23’ மற்றும் ‘மிக்-27’ விமானங்களை மாற்றுவதற்கு உதவும். இந்த விமானங்கள் படிப்படியாக வெளியேற்றப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் விமானப்படை தலைமையகம் முழு ஆதரவு அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து புதிதாக 97 LCA தேஜஸ் மார்க் 1A விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘எல்சிஏ மார்க் 1ஏ’ விமானம் விமானப்படைக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 40 ‘எல்சிஏ’ விமானங்களை விட மேம்பட்ட மின்னணு சாதனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ரேடார்களைக் கொண்டுள்ளது.