மத்திய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி திருத்தச் சட்டம் எனப்படும் RTE-ன் படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. அதாவது இந்த கல்விக்கான கட்டணத்தை அரசே செலுத்தி விடும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம். இதற்கு நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகள் எல்.கே.ஜி. முதல் முதல் 8-ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் பயில முடியும். இதற்காக எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இடம் ஒதுக்கப்படும்.
இந்த நிலையில், தற்போது 2024 – 25 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்கும் பொழுது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.