மத்திய அரசு திட்டங்கள் பற்றி போலியான தகவல்களை பரப்பி வந்த 3 யூடியூப் சேனல்களை முடக்குமாறு மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கிறது.
அண்டை நாடான சீனா, தனது செயலிகளை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனாளர்களின் தகவல்களை திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதேபோல, பல்வேறு யூடியூப் சேனல்கள் நாட்டுக்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும், மத நல்லிணக்கம், வெளிநாடுகளுடனான நட்புறவு மற்றும் பொதுஅமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலும் தகவல்களை பரப்பி வந்தன. இதையடுத்து, மேற்கண்ட யூடியூப் சேனல்களுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. அந்த வகையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்த பிரபலமான மற்றும் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட 3 யூடியூப் சேனல்களை முடக்குமாறு மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கிறது. அதாவது, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள், பெண்கள், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், தொழில் புரிவோர் என்று பல்வேறு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அரசின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அச்சு மற்றும் காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில், செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அதேசமயம், பல யூடியூப் சேனல்கள் தங்களது கன்டென்ட்டுகளுக்காக மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதை உண்மை என்று மக்கள் நம்பி விடுகின்றனர். இதனால், அரசு அதிகாரிகளிடம் சென்று தகராறில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு, மத்திய அரசின் திட்டங்களை பற்றி போலியான தகவல்களை 3 பிரபலமான சேனல்கள் பகிர்வது, அரசின் உண்மை தகவல் சோதனை மையம் நடத்திய சோதனையின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட சேனல்கள் வெளியிடும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் மத்திய, மேற்கண்ட சேனல்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்குமாறு, அத்தளத்துக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.
இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை இந்தியாவில் பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 3 யூடியூப் சேனல்களும், உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசின் திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்து பொய் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. அதாவது, எதிர்வரும் தேர்தல்கள் வாக்குச்சீட்டுகள் மூலம் நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொய்யான செய்திகளை செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
மேலும், மேற்கண்ட யூடியூப் சேனல்கள் தங்களது வீடியோக்களில் விளம்பரங்களைக் காட்டுவதும், தவறான தகவல்களை பரப்பி பணமாக்குவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேற்கண்ட 3 சேனல்களும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதும், 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த யூடியூப் சேனல்கள் வெளியிட்ட தவறான தகவல்களை பார்த்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட 3 யூடியூப் சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சம் தடை விதிக்கிறது. மேலும், மேற்கண்ட சேனல்களை முடக்க யூடியூட் தளத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிட்டிருக்கிறது.