அண்ணாமலை தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தலைவராக வருவார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழ்மொழி. தொன்மையான, அழகிய தமிழில் பேச எனக்கும் ஆசைதான். எனக்கு தமிழ் தெரியாததால், என் தாய்மொழியான இந்தியில் பேசுகிறேன். திருக்குறள் என்ற ஒப்பற்ற நூலை எழுதிய வள்ளுவர் பிறந்த மண் இது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல முடிவுகளை எடுக்க திருக்குறள் உதவி செய்கிறது. தமிழகத்தில் பன்மையான செங்கோல், பார்லிமென்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதால் அனைத்து மாநிலத்திற்கும் தமிழ் மக்கள் குறித்து தெரியவந்திருக்கிறது.
உலக நாடு முழுவதும் இந்தியா என்ன சொல்லப் போகிறது என்று உற்று நோக்கும் அளவுக்கு நமது ஆட்சி அமைந்திருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது பாஜக. பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி நடத்துகின்றன. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி செய்யும் ஊழல், இந்தியா முழுவதும் தெரிந்திருக்கிறது. ஆகவே, ஒரே ஒரு முறை பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஊழல் இல்லா ஆட்சியை கொடுப்போம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள். செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஜனநாயகத்தை முடக்குவதாக பேசுகிறார், புலனாய்வு அமைப்புகளின் பணிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். இதே செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று கூறிய ஸ்டாலின், அவரை உடனே கைது செய்யவேண்டும் என்று பேசினார்.
நாட்டுக்காக பாடுபட்டு வரும் பிரதமரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, இகழாமல் இருக்கலாம். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரமதரை குற்றம்சாட்டி வருகிறார். இலங்கையில் வாழும் தமிழர்கள் நலமுடன் இருக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கிறார். அதேபோல, ஒருவரை பார்த்தாலே அவர் எப்படி வருவார் என்று சொல்ல முடியும். அண்ணாமலை, தமிழகத்துக்கு மட்டும் தலைவரல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைவராக வருவார் என்று என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.