இன்று இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமான விசேஷமான நாள். அது என்னவென்றால், கடந்த ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 23) இந்தியா நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெயரைப் பெற்றது. அதைவிட முக்கியமாக, நிலவில் தரையிறங்க கடினமான பகுதியான மற்றும் இதுவரை எந்த நாடும் நெருங்காத தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. நிலவில் தடம் பதிக்கும் இந்தியாவின் கனவுக்கு கைகொடுத்தது சந்திராயன் 3 விண்கலம். சந்திராயன் 3 திட்டம் வெற்றியை பறைசாற்றும் வகையில் பிரதமர் மோடி ஆகஸ்ட் 23 தினத்தை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தார்.
இந்தச் சாதனையைப் போற்றும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதியை “தேசிய விண்வெளி தினமாக” அறிவித்தார். இந்நிலையில், நாட்டின் முதலாவது தேசிய விண்வெளி தினமானது இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சந்திரயான்-1: இந்தியாவின் முதல் நிலவுப் பயணமான சந்திரயான்-1 அக்டோபர் 22, 2008 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள சூழ்ச்சிகள் மற்றும் நிலவை நோக்கி பயணிப்பதற்கான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, சந்திரயான்-1 நவம்பர் 10 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது, அப்போது நிலவின் அருகே சென்ற ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்தது.
நவம்பர் 14 அன்று நிலவின் தென் துருவத்தில் உள்ள ஷேக்லெட்டன் பள்ளம் அருகே மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி) என்ற இடத்தை அடைந்தது. இந்தப் பணி இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் துரதிஷ்ட விதமாக 28 ஆகஸ்ட், 2009 அன்று ஆர்பிட்டருடனான தொடர்பை இஸ்ரோ இழந்ததையடுத்து, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
சந்திரயான்-1 தோல்விக்குப் பின் 22 ஜூலை, 2019 அன்று சந்திரயான்-2 ஏவப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் சூழ்ச்சிகள் மற்றும் இறுதியாக டிரான்ஸ்-லூனார் பாதையைக் கடந்த சந்திரயான்-2 ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. பின் செப்டம்பர் 6, 2019 அன்று சந்திரயான்-2 லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதனால் அந்த ஆய்வுப் பணிக்கான திட்டமும் தோல்வியைத் தழுவியது. இந்த திட்டம் தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் மனம் உடைந்து கண்ணீர் விடும்போது பிரதமர் மோடி அவரை அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றுகிறார்.
தோல்விகளை கண்டு மனம் தளராத இந்தியா மீண்டும் ஒருகை பார்த்துவிடுவோம் என மீண்டும் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் பணியை தீவிரப்படுத்தியது.இந்த நிலையில் கடந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14 அன்று வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1, 2023 அன்று, ட்ரான்ஸ் லூனார் எனப்படும் நிலவை நோக்கிய சுற்றுப் பாதைக்கு வெற்றிகரமாகச் சென்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆகஸ்ட் 17, 2023 அன்று, உந்துவிசை பகுதியிலிருந்து லேண்டர் பகுதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 23 அன்று லேண்டரை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி முதல் நாடாக இந்தியா தனது கொடியை நாட்டியது.
அதேபோல், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா ஆனது. இந்த விண்வெளி ஆய்வுப் பணியானது 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு திரைப்படம் எடுக்கவே 700, 800 கோடி ஆகும் நிலையில், மிகவும் குறைவான செலவு தொகையில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது இந்தியாவிற்கு கூடுதல் சிறப்பு.
இந்தியாவின் முதலாவது தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் பதிவில்,
முதல் தேசிய விண்வெளி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விண்வெளித் துறையில் நமது தேசத்தின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நினைவு கூர்கிறோம். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாளாகவும் இது அமைகிறது. எங்கள் அரசாங்கம் இந்தத் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது, மேலும் வரும் காலங்களில் நாங்கள் இன்னும் பலவற்றைச் செய்வோம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.