அசைவ பிரியர்கள் அசைவ உணவுக்கு அடிமையாக இருப்பார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதனால் ஹோட்டலுக்கு சென்று அசைவ உணவை சாப்பிட்டு விடுகின்றனர். அவர்கள் இறைச்சியை வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஹோட்டலில் சாப்பிடுவதுதான் பிரச்சனை. ஏனெனில் அவர்கள் உணவின் சுவைக்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களை சேர்ப்பார்கள். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அவர்கள் உணவு சமைக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்க மாட்டார்கள். பழைய சிக்கனை சூடுபடுத்தி கொடுப்பது போன்ற நிகழ்வால் பிரியாணியில் புழு சிக்கனில் பல்லி என சமீபத்தில் நிறைய புகார்களை நாம் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மிகவும் பிரபலமான கேஎப்சி உணவகத்தில் நடந்த ஆய்வினால் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாநகர் பகுதியில், தமிழ்ச் சாலையில் உள்ள வேலவன் மார்க்கெட் வளாகத்தில் கேஎப்சி என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு கொண்டனர்.
அந்த ஆய்வின் போது, அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. கேஎப்சி உணவகத்தில் உணவு தயாரிக்கப்படும் எண்ணெயில் பயன்படுத்த அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் (Magnesium silicate – synthetic) என்ற உணவு சேர்மத்தை, பயன்படுத்தியதும், அதனை மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, அந்த உணவகத்திலிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் – சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதைப் பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி முன் தயாரிப்பு செய்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த, 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும், பொது சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில், இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்படாமல் தனியாக மெக்னீசியம் சிலிக்கேட் – சிந்தெட்டிக் என்ற உணவு சேர்மத்தினை இருப்பு வைத்து, அதைப் பயன்படுத்தி பாதுகாப்பற்ற வகையில், பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்தப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமமானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் வரை அந்த உணவகம் இயங்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை மீறும் பட்சத்தில், வளாகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெக்னீசியம் சிலிக்கேட்- சிந்தெட்டிக் மற்றும் அதைப் பயன்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றிலிருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரில் சில இடங்களில் பானிபூரி கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அக்கடைகளில் இருந்த பானியில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆய்வில், மூன்று பானி பூரி உணவு மாதிரிகளும், 3 பானி பூரி மசாலா உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டு, பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை, வந்த பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது.