செண்பகராமன் பிள்ளை செப்டம்பர் 15, 1891 அன்று, திருவனந்தபுரத்தில் சின்னசாமி பிள்ளை மற்றும் நாகம்மாளுக்கு, மகனாகப் பிறந்தார். 15 வயதில், ஆஸ்திரியா (Austria) சென்றார். அங்குள்ள ஒரு பள்ளியில், பள்ளிக் கல்வி பயின்றார். பள்ளி கல்வி முடித்ததும், பொறியியல் டிப்ளமோ (Diploma) படித்த போது, முதல் உலகப் போர் மூண்டது.
செப்டம்பர் 1914ல், செண்பகராமன் பிள்ளை சூரிச்சில் (Zurich), ‘சர்வதேச இந்திய சார்பு குழுவை’ (International Pro-India Committee) நிறுவி, குழுவின் தலைவராகவும் இருந்தார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய சுதந்திரம் தொடர்பான சங்கம் – ‘இந்திய சர்வதேச குழு’ (Indian International Committee) ஒன்று ஏற்கனவே அமைந்துள்ள விவரத்தை அறிந்தார். சர்வதேச இந்திய சார்பு குழுவை, இந்திய சர்வதேச குழுவுடன் இணைத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், பல கிளைகளைத் திறந்தார்.
வெளிநாட்டில் இந்திய சுதந்திர துடிப்புடன் வசித்து வந்த இந்திய புரட்சியாளர்களை ஒன்றிணைத்த செண்பகராமன், ஜெர்மன் நாஜிகளுடன் உலகப் போரில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒப்பந்தம் செய்தார்.
செண்பகராமனின் குடும்பத்தார்கள், பிற்காலத்தில் கொடுத்த அறிக்கையின் படி, கேப்டன் கார்ல் வான் முல்லருடன் (Captain Karl von Muller ) கப்பலில் செண்பகராமன் இருந்ததாகவும், முதல் உலகப் போரின் போது, ஜெர்மன் போர்க் கப்பல் எஸ்.எம்.எஸ். எம்டனை (SMS Emden) ஒருங்கிணைத்து, மெட்ராஸ் துறைமுகத்தை தாக்கினார், என்பதையும் அறியலாம். இந்த கப்பல், வங்காள விரிகுடா நீரில் நுழைந்து, மெட்ராஸ் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட பிரிட்டிஷ் போர்க் கப்பல்களை தாக்கி, சேதப் படுத்தியது. எம்டனால் சென்னை கடற்கரையில், பல இடங்கள் தாக்கப்பட்டு, ஒரு எண்ணெய் கிடங்கும், தீ பற்றி எரிந்தது.
இந்த சம்பவம், மதராசப்பட்டினத்தில் உள்ள ஆங்கிலேயர்களை பெரிதும் பீதியடையச் செய்தது. பின்னர் 1915ல், செண்பகராமன் இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
இந்திய சுதந்திரத்திற்கான உணர்வை, இந்தியர்களிடம் எழுப்பும் முதல் மந்திரமான “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தை வழங்கிய இந்தியர், ‘செண்பகராமன் பிள்ளை’ ஆவார்.
முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்தது, செண்பகராமனை சோர்வடைய செய்தது. ஜெர்மனிய படையை பயன்படுத்தி, இந்தியாவை ஆட்சி செய்திருந்த ஆங்கிலேய படைக்கு எதிராக நிறுத்தி, கிளர்ச்சி செய்ய, அவரது திட்டமும் தோல்வி அடைந்தது.
ராணுவ சீருடையுடன் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு, தன்னார்வலர் படைப் பிரிவை செண்பகராமன் பிள்ளை, ‘இந்திய தேசிய தன்னார்வப் படை’ (Indian National Volunteer Corps) என்ற பெயரில் நிறுவினார்.
1919ல் வியென்னாவுக்கு (Vienna) வந்த சுபாஷ் சந்திர போஸ், செண்பகராமன் பிள்ளையை சந்தித்தார். பிள்ளையின் ‘இந்திய தேசிய தன்னார்வப் படை’யை கண்டு ஊக்கமடைந்தார்.
பிள்ளையின் இந்த அமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட யோசனையின் அடிப்படையை வைத்து, சுபாஷ் சந்திர போஸ் இரண்டாம் உலகப் போரின் போது, தனது ‘இந்திய தேசிய இராணுவத்தைத்’ (INA – Indian National Army) தொடங்கினார். செண்பகராமனின் “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தையே, தனது அமைப்பின் தாரக மந்திரமாகவும் வைத்தார்.
மணிப்பூரைச் சேர்ந்த லக்ஷ்மி பாயை (Lakshmibai), பெர்லினில் (Berlin) சந்தித்த செண்பகராமன் 1931ல் மணந்தார்.
ஆரம்பத்தில், நாஜிக்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் பொது எதிரியான பிரிட்டிஷுக்கு எதிராக போராட ஆதரவளித்தனர். ஆனால், முதல் உலகப் போரில், ஜெர்மனி தோற்கத் தொடங்கியதும், இந்தியப் புரட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கி, இந்திய நடவடிக்கைகள் குறித்து, நாஜிக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான், இந்தியர்கள் தன்னை ஆளும் திறனற்றவர்கள், என இந்தியர்களை குறைத்து சொன்னார், ஹிட்லர். ஹிட்லரின் இந்த சொல்லுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் செண்பகராமன், ஹிட்லரை இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். இது, நாஜிக்களுக்கு செண்பகராமன் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ஹிட்லர் உத்தரவின் படி, மே 26, 1934 அன்று, 42 வயதான செண்பகராமன் பிள்ளையின் உணவில், நாஜிக்கள் விஷம் வைத்து, அவரைக் கொன்றதாகக் கூறப் படுகிறது.
தன் கணவரின் மரணத்திற்கு பின்பு, நாஜிக்களிடம் பல துன்பங்களை அனுபவித்த லட்சுமிபாய், தன் கணவரின் அஸ்திகளையும், அவரது டைரி மற்றும் சில முக்கியமான ஆவணங்களையும் பத்திரமாக வைத்து, 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணுக்கு கொண்டு வந்தார்.
ஜெர்மனியில், நாஜிக்களிடமிருந்து தப்பித்த லட்சுமிபாய், பெர்லின், இத்தாலி, ஸ்பெயின் சென்று இறுதியில் மும்பை வந்தடைந்தார். செப்டம்பர் 16, 1966 அன்று, சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்ட, இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்ஸில் (INS), செண்பகராமன் பிள்ளையின் அஸ்திகள் கொச்சினுக்கு (Cochin) கொண்டு வரப் பட்டது. வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகியின் தியாகங்களுக்கு இது அஞ்சலியாகும்.
செண்பகராமனின் விருப்பப்படி, அவரது சாம்பலில் பாதி, அவரது சொந்த ஊரான நாஞ்சில் நாட்டில் (இன்றைய கன்னியாகுமரி கடலிலும், மீதமுள்ளவை கேரளா ஆற்றிலும், கரைக்கப்பட்டன.
செண்பகராமன் பிள்ளையின் தியாகம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில், அவரது பங்களிப்புகளை அங்கீகரித்து, மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
தமிழரான செண்பகராமன் பிள்ளை, கேரளாவில் பிறந்து, ஐரோப்பாவில் படித்து, வளர்ந்து, இறக்கும் வரை, தனது தாய் நாட்டின் விடுதலைக்காக, கடுமையாக போராடினார். அந்த வீர சுதந்திர போராட்டத் தியாகியை நினைவு கொள்வோம்.
- Dr.M.Vijaya