செனாப் ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி : மோடி அரசுக்கு குவியும் பாராட்டுக்கள் !

செனாப் ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி : மோடி அரசுக்கு குவியும் பாராட்டுக்கள் !

Share it if you like it

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில் சேவைகளுடன் இணைக்கும் விதமாக உலகின் மிகப் பெரிய ரயிவ்லே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ரம்பான் மாவட்டம் ரீஸ்ஸி பகுதியில் உள்ள செனாப் நதியின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த பாலத்தில் சோதனை அடிப்படையில் ரயில் இயக்கப்பட்டது.

முதற்கட்ட சங்கல்டான் முதல் ரீஸ்ஸி வரை ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில், உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரின் சங்கல்டன் – ரீஸ்ஸி இடையே இயக்கப்பட்ட ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக பதிவிட்டுள்ளார்.

தற்போது கன்னியாகுமரி முதல் கத்ரா வரைக்கும், பாரமுல்லாவில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சங்கல்டான் வரையும் ரயில்வே சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த உதம்பூர் – ஸ்ரீநகர் -பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெற்று ரயில் சேவை வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த உதம்பூர் – ஸ்ரீநகர் -பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் பனிஹல் – சங்கல்டன் இடையிலான ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். திட்டத்தின் முதல் கட்டமாக காசிகுண்டு இருந்து பாரமுல்லா வரையிலான 118 கிலோ மீட்டர் தூரம் இடையிலான ரயில் சேவை கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

அடுத்தடுத்த கட்டங்களில் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 கிலோ மீட்டர் இடையே பனிஹால்- காசிகுண்ட் பகுதியிலும், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதம்பூர்-கத்ரா இடையே 25 கிலோ மீட்டர் தூர பாதையில் ரயில்வே சேவை தொடங்கப்பட்டன. செனாப் ரயில் பாலம் செனாப் ஆற்றின் மேல் ஏறத்தாழ ஆயிரத்து 178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டதாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக ஏறத்தாழ ஆயிரத்து 315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை கட்டும் பணியில் மத்திய ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் பிரதமர் மோடி அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *