செங்கல்பட்டு கோர்ட் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூரைச் சேர்ந்தவர் லோகேஷ். அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது, 2 கொலை வழக்குகளும், 4 வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இந்த சூழலில், இன்று காலை 10.30 மணியளவில் வழக்கு விசாரணை ஒன்றிற்காக செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வந்த லோகேஷ், கோர்ட் அருகேயுள்ள ‘ஜூஸ் கோர்ட்’ என்கிற குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடையில் நின்று ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், லோகேஷை குறிவைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. முதலில் அவர் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் அக்கும்பல் வீசியது.
இதில் நிலைகுலைந்த லோகேஷ், அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனே, மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், கீழே விழுந்து கிடந்த லோகேஷை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். லோகேஷுடன் வந்த மற்றொரு வாலிபரும் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த செங்கல்பட்டு டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, லோகேஷ் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இக்கும்பல் லோகேஷை கொலை செய்ததும் தெரியவந்திருக்கிறது.