தலைநகரில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். பா.ஜ.க. எஸ்.சி., எஸ்.டி பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவர், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே உள்ள சாமிநாயக்கன் தெருவுக்கு சென்றார். அங்கு சாலையோரத்தில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பாலச்சந்தரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், சம்பவ இடத்திலேயே பாலச்சந்தர் துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு, கிழக்கு இணை ஆணையர் பிரபாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் ஸ்பாட்டுக்கு வந்து சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இக்கொலை சமபவம் தொடர்பாக 5 தனிப்படை கொண்ட போலீஸ் டீம் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு (PSO) வழங்கப்பட்டிருந்தது என்பதுதான். சம்பவம் நடந்த நேரத்தில், பாலச்சந்தரின் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர், டீ அருந்தி விட்டு வருவதாகக் கூறிவிட்டு, அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று டீக் குடித்து கொண்டிருந்திருக்கிறார். இதை பக்காவாக நோட்டம் விட்ட கொலை கும்பல், பி.எஸ்.ஓ. டீக்கடைக்குச் சென்ற சமயம் பார்த்து பாலச்சந்தரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருககிறது.
போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி பிரமுகரை வெட்டி படுகொலை செய்யப்படிருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்க பிரதமர் மோடி நாளை (26-ம் தேதி) சென்னை வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க. நிர்வாகி பாலச்சந்தர் படுகொலை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, கேரளாவைப் போலவே தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு தடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.