காக்கா பிரியாணி, நாய் பிரியாணி காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது சுடச்சுட பூனைக்கறி பிரியாணிதான் ஃபேமஸ். அதுவும் தீபாவளி ஸ்பெஷலே பூனைக்கறி பிரியாணிதான் என்கிறார்கள் சென்னை வாழ் மக்கள்.
தலைநகர் சென்னை மிகப்பெரிய நகரம். உலகிலேயே 2-வது பெரியதான மெரீனா பீச் இங்குதான் இருக்கிறது. தவிர, துறைமுகம் முதல் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதும் தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான். அதேபோல, சாஃப்ட்வேர் கம்பெனிகள் முதல் சாதாரண லேத் பட்டறை வரை வேலைக்கு பஞ்சமே இல்லாமல் இருப்பதும் சென்னை மட்டும்தான். இதனால்தான், கடைக்கோடியில் இருக்கும் சாதாரண குடிமகன்கூட வேலை தேடி சென்னைக்கு வருவது வாடிக்கையாக இருக்கிறது. அப்படிப்பட்ட சென்னை என்கிற மிகப்பெரிய கடலில் சாதாரண ஏழை குடிமகன் 3 வேலை வயிறார சாப்பிட முடியுமா என்றால் நிச்சயம் முடியும். காரணம், சாதாரண ரோட்டோர கடை முதல் 5 ஸ்டார் ஹோட்டல்கள் வரை உண்டு. அவரவர் வசதிக்கேற்ப உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அந்த உணவு, அதன் தரம் எப்படிப்பட்டது என்பதுதான் விவகாரமே. ‘ரன்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில் காமெடி நடிகர் விவேக், காக்கா பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படும். இக்காட்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும், சென்னை பட்டணத்தின் உண்மை நிலை இதுதான். சிக்கன், காடை பிரியாணியில் காகத்தையும், மட்டன் பிரியாணியில் நாய் மற்றும் பூனைக்கறிகளை கலப்பதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்தும் வருகிறார்கள். ஆனாலும், கலப்படத்தை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையிலுள்ள பிரியாணி கடைகளுக்கு ரயிலில் வந்த 1,000 கிலோ நாய்க்கறியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், சென்னையில் மட்டன் பிரியாணியில் பூனைக்கறியை கலந்து விற்பது தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைக் கேட்டதும் ‘அடக்கருமமே!’ என்று நீங்கள் காறி உமிழ்வதும், ‘உவ்…வே…’ என்று வாந்தி எடுக்க குமுட்டுவதும், அப்படியே கண் முன்னால் தெரிகிறது. ஆனால், இதுதான் உண்மை. நீண்ட நாட்களாக நடந்து வந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சென்னையில் முக்கிய பகுதிகளாகக் கருதப்படும், குரோம்பேட்டை, பல்லாவரம், ராயப்பேட்டை, தியாகராயநகர், அடையாறு, கோட்டூர்புரம், அண்ணாநகர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் திடீர் திடீர் என மாயமாகின. இதுகுறித்து பூனைகளின் உரிமையாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஆவடி, பல்லாவரம், செங்குன்றம் ஆகிய காவல்நிலையங்களின் போலீஸார், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, இறைச்சிக் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் போல சென்ற போலீஸார், அக்கடைகளுக்கு பூனையை சப்ளை செய்பவர்களை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார்கள். விசாரணையில் அவர்கள் செங்குன்றம் பகுதியில் வசிக்கும் நாடோடிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செங்குன்றம் பகுதியில் சாக்கு மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பூனைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டுக்கறி விலை 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், சாலையோர கடை வியாபாரிகளுக்கு கட்டுபடியாகவில்லை. எனவே, பூனைக்கறியை கிலோ 100 ரூபாய்க்கு வாங்கி, ஆட்டுக்கறியுடன் கலந்து பிரியாணி செய்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
சாலையோர கடைகள் மட்டுமல்ல, மட்டன் விலை அதிகரிப்பால் சில பெரிய கடைகளிலும் ஆட்டுக்கறியுடன், மாட்டுக்கறி, பூனைக்கறி, நாய்க்கறி உள்ளிட்ட மிருகங்களில் இறைச்சியையும் கலப்படம் செய்து பிரியாணி செய்வதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பிரியாணி பிரியர்களே உஷார்…