கோர்ட்டிலேயே நீதிபதிகளுக்கு மிரட்டல்: இஸ்லாமிய தீவிரவாதிகள் துணிச்சல்!

கோர்ட்டிலேயே நீதிபதிகளுக்கு மிரட்டல்: இஸ்லாமிய தீவிரவாதிகள் துணிச்சல்!

Share it if you like it

பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகளை கொடூரமாகக் கொலை செய்த இஸ்லாமிய தீவிரவாதிகள், கோர்ட்டிலேயே நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்தவன் போலீஸ் பக்ருதீன். இஸ்லாமிய தீவிரவாதியான இவனது தலைமையில் ‘ஜிகாத் புனிதப் படை’ என்கிற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர். இத்தீவிரவாதிகள் ஹிந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். அந்த வகையில், 2013-ம் ஆண்டு வேலுாரில் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடியில் முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொடூரமாகக் கொலை செய்தனர்.

இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு தொடர்பாக சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதன்படி, இவ்வழக்கு நீதிபதி இளவழகன் முன்பு 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தங்களது சார்பில் வாதாட, வக்கீல்கள் யாரையும் மூவரும் நியமிக்கவில்லை.

எனவே, வழக்கு விசாரணையின்போது நீதிபதி இளவழகன், ‘உங்கள் மீதான வழக்கை நடத்த நீங்கள் வழக்கறிஞரை நியமிக்காவிட்டால் நீதிமன்றமே வழக்கறிஞரை பணியமர்த்தும். அடுத்த வாய்தாவில் சாட்சிகளை விசாரிக்க துவங்கி விடுவோம்’ என்று கூறினார். அதற்கு, பிலால் மாலிக் ‘எங்கள் அனுமதியை பெறாமல் விருப்பம் இல்லாமல் நீங்களே வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாமா, அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? அப்படி இருந்தால் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்தவும்’ என்றான். பதிலுக்கு ‘உங்களுக்கு சட்டப்படி தெரிவிப்பேன்’ என்று நீதிபதி கூறிவிட்டு, மூவரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது திடீரென போலீஸ் பக்ருதீன் என்பவன், ‘எந்த போலீஸ்காரரும் எங்களை தொடக்கூடாது. நான் நீதிபதியிடம் பேச வேண்டும்’ என்று மிரட்டினான். மேலும், ‘இந்த வழக்கை நாங்கள் நடத்த மாட்டோம். நீங்கள் எங்களை துாக்கில் போடுவீர்கள்; இல்லையென்றால் சுட்டுக் கொலை செய்வீர்கள். உங்களால் வேறு என்ன செய்ய முடியும்?’ என்று மிரட்டும் தொனியில் பேசி, நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். தொடர்ந்து, பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும் ‘இனி இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. இப்போதே சாகத் தயார். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்’ என்று சவால் விட்டனர்.

இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் வீடியோ பதிவு செய்தார். இதைக் கண்ட தீவிரவாதிகள் அந்த போலீஸ்காரரை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினர். இதன் பிறகு, மூவரும் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே, ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் பொதுவெளியில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில், தற்போது இஸ்லாமிய தீவிரவாதிகள், நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற பயங்கரவாதிகள் நாட்டுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகவே, தீவிரவாதிகள் மீதும், அதற்கு துணைபோகும் அடிப்படைவாதிகள் மீதும் அரசும், நீதிமன்றமும் தயவுதாட்சணியமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it