சென்னையில் தி.மு.க. பிரமுகரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த தமீம்பானு, வாஷிம்பாஷா, டில்லி பாபு ஆகியோரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மணலி செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திருவொற்றியூர் 7-வது வார்டு தி.மு.க. பிரதிநிதியாக இருந்த இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார். இந்த சூழலில், கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சக்கரபாணி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் நாகேந்திரன் மணலி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து சக்கரபாணியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆஃப் மோடில் இருந்த சக்கரபாணியின் செல்போன், நேற்று திடீரென ஆன் செய்யப்பட்டது. இதையறிந்த போலீஸார், அவரது செல்போன் சிக்னல் டவரை வைத்து ஆய்வு செய்தபோது, ராயபுரம் பகுதியை காட்டியது. உடனே, டவர் லொக்கேஷன் காட்டிய ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவில் வசிக்கும் அஸ்லாம் உசைன் என்பவரது வீட்டிற்கு போலீஸார் சென்றனர். அங்கு அவரது மனைவி தமீம் பானு (35), அவரது மைத்துனர் வசிம்பாஷா (35), ஆட்டோ டிரைவர் டில்லிபாபு (29) ஆகியோர் இருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது.
உடனே, உஷாரான போலீஸார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, குளியல் அறையில் ரத்தக்கறையுடன் சாக்கு மூட்டை ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அதை பிரித்துப் பார்த்தபோது, சக்கரபாணியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பாலிதீன் பைகளில் தனித்தனியாக கண்டப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, சக்கரபாணியின் உடலை கைப்பற்றி போலீஸார், தமீம்பானு, வசீம்பாஷா, டில்லிபாபு ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, தமீம்பானு மணலியில் சக்கரபாணியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்திருக்கிறார். அப்போது, சக்கரபாணியிடம் வட்டிக்கு பணம் வாங்கி வந்திருக்கிறார். இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் அஸ்லம் உசைனுக்கு தெரியவரவே, மணலி வீட்டை காலி செய்து விட்டு, ராயபுரம் கிரேஸ் கார்டனில் குடியேறி இருக்கிறார்கள். ஆனால், ராயபுரம் வந்த பின்னரும் தமீம்பானுவுக்கு, சக்கரபாணிக்குமான கள்ளத் தொடர்பு தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி தமீம்பானு வீட்டிற்கு வந்திருக்கிறார் சக்கரபாணி. அங்கு இருவரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். இதை தமீம்பானுவின் மைத்துனர் வசிம்பாஷா பார்த்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர், சக்கரபாணியை அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர், சக்கரபாணியின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார் வாஷிம்பாஷா. பிறகு, தமீம்பானு மற்றும் தனது நண்பரான டில்லிபாபு ஆகியோர் உதவியுடன், சக்கரபாணியின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி இருக்கிறார்.
பின்னர், ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபுவிடம் சக்கரபாணியின் தலையை மட்டும் கொடுத்து, அடையாறு ஆற்றில் வீசச்சொல்லி இருக்கிறார். அதன்படி, அவரும் வீடி விட்டு வீடு திரும்பி இருக்கிறார். இதன் பிறகு, மற்ற உடல் பாகங்களை எங்கு வீசுவது என்று யோசித்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான், சக்கரபாணியின் செல்போனை தவறுதலாக ஆன் செய்து விட்டார் வசீம்பாஷா. இந்த செல்போன் டவர் லொக்கேஷனை வைத்துத்தான் போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தமீம்பானு, வசிம்பாஷா, டில்லிபாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும், அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணி தலையை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
நேற்று மாலை முதல் அடையாறு ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டனர். ஆனால், இரவாகி விட்டதால் தலையை தேடும் பணி கைவிடப்பட்டது. ஆகவே, இன்று அதிகாலை 5 மணி முதல் தலையை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. சைதாப்பேட்டை, கிண்டி, மயிலாப்பூர், திருவான்மியூர் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 30 பேர் 2 படகுகளில் அடையாறு ஆற்றில் இறங்கி சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அடையாறு ஆற்றில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருப்பதால் படகில் இருந்தபடி பாதாள கரண்டி மூலம் தலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.