லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, சரத்குமார், சிவகார்த்திகேயன், அஜித் மனைவி ஷாலினி உள்ளிட்ட தரை பிரபலங்கள் காதல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் திருப்பதி சென்றிருந்த இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர். இதன் பிறகு, ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துகொள்வதாக அறிவித்து, பத்திரிகை அச்சடித்து திரையுலகினர் உட்பட முக்கிய புள்ளிகளுக்கு கொடுத்தனர். அதன்படி, இன்று மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விசேஷ கண்ணாடி மாளிகை போன்று திருமண அரங்கை பிரமாண்டமாக அமைத்திருந்தனர். தொடர்ந்து, இன்று காலை 10.20 மணிக்கு ஹிந்து பாரம்பரிய முறைப்படி நயன்தாரவின் கழுத்தில் தாலி கட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இத்திருமணத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை மெஹந்தி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல, திருமண நிகழ்ச்சிக்கு முக்கிய பிரபலங்கள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருமண விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், அட்லி, நெல்சன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சரத்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, அஜித் மனைவி ஷாலினி, கேரள நடிகர் திலீப் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதேசமயம், திருமண விழா உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டனர் திருமண ஜோடிகளாக நயன்தாராவும், விக்னேஷ் சிவன் ஆகியோர். ஆகவே, திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, செல்போன்களை அரங்கத்திற்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் விதித்திருந்தது. இதனால், திரையுலகினர் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன், ‘கடவுளுக்கு நன்றி! ஒவ்வொரு நல்ல உள்ளமும், ஒவ்வொரு நல்ல தருணமும், ஒவ்வொரு நல்ல தற்செயல் நிகழ்வும், ஒவ்வொரு நல்ல ஆசீர்வாதமும், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனையும்! நல்ல வெளிப்பாடுகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்! தற்போது இவை அனைத்தையும் நயன்தாராவுக்கு சமர்ப்பிக்கிறேன். என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை தொடங்கவும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
