வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான உலோகத்தினாலான 3 சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கோயில்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் இருந்த பழங்கால சிலைகள் திருடப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆட்டையபோடப்பட்டும் வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் பணமுதலைகளுக்கு விற்கப்பட்டு கோடி கோடியாக பணம் கல்லாகட்டப்பட்டு வந்தது. ஆகவே, திருடுபோன சிலைகளை கண்டுபிடிக்க 2012-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டவர். மிகவும் சிறப்பாக செயல்பட்ட இவர், 2019-ம் ஆண்டுவரையிலான 7 ஆண்டு காலத்தில் தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 201 உலோகச் சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள் மற்றும் 212 ஓவியங்கள் என மொத்தம் 1,146 கோயில் சிலைகளை மீட்டார். அதாவது, தமிழகக் கோயில்களில் திருடுபோன 155 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை மீட்டதோடு, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறார்.
குறிப்பாக, 1982-ம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில் இருந்து திருடுபோன சுமார் 700 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுக்கு கொண்டு வந்து சாதனை படைத்தார். மேலும், சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 455 வழக்குகள் பதிவு செய்திருக்கிறார். தவிர, இந்து சமய அறநிலையத்துறையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அத்துறையின் அதிகாரிகள் சிலரையும் கைது செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு வழங்குதில்லை என்று கூறி, இவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு பணி ஓய்வு பெற்றார். எனினும், அவர் விட்டுச் சென்ற பணியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டிருக்கிறார்கள். சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ‘தி பவ்டிக்’ என்கிற கலைப்பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக புராதன உலோகத்திலான சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு அந்நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது, நின்ற நிலையிலான பார்வதி அம்மன் சிலை, அமர்ந்த நிலையிலான பார்வதி அம்மன் சிலை, நடனமாடும் சிவன் சிலை ஆகிய 3 சுவாமி சிலைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேற்படி சிலைகள், தமிழகத்தில் உள்ள ஏதேனும் பழமையான கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கோயிலில் சுவாமி சிலைகள் திருட்டு போன வழக்குகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும், தற்போது மீட்கப்பட்டிருக்கும் இந்த சுவாமி சிலைகளின் மதிப்பு 2.50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று போலீஸார் கருதுகிறார்கள். இந்த சிலை கடத்தல் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் போலீஸார் புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் தற்போது சிக்கியவர்களின் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. வெளிநாடு கடத்தி செல்ல இருந்த முயற்சியை முறியடித்து சுவாமி சிலைகளை மீட்ட சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸாரின் பணியை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டி இருக்கிறார்.