சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆபத்து? சமூக வலைத்தளங்களில் வலம் வரும் சர்ச்சை!

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆபத்து? சமூக வலைத்தளங்களில் வலம் வரும் சர்ச்சை!

Share it if you like it

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவல்களால், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 21 மாநகராட்சி மேயர் பதவிகளையும் தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல, 124 நகராட்சிகள் மற்றும் 435 பேரூராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சேர்மன்கள், துணை சேர்மன்கள் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4-ம் தேதி நடந்தது.

இந்த நிலையில், சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி மேயராக ப்ரியா ராஜனும், தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரியும் பதவியேற்றிருக்கிறார். இதில், ப்ரியா ராஜன்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், மதம் மாறிவிட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாறிவிடுகிறார்கள். அந்த வகையில், ப்ரியாவின் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேயர் ப்ரியாவின் குடும்பத்தை நன்கு அறிந்த ஒருவர் நம்மிடம் கூறியதாவது:- “ப்ரியாவின் தந்தை பெயர் ராஜன் என்று கூறப்பட்டாலும், அவரது உண்மையான பெயர் அகஸ்டின். அதேபோல, ப்ரியாவின் கணவரும் கிறிஸ்தவர்கள்தான். ப்ரியாவின் மகள் பெயர் செபஸ்டினா. ப்ரியாவும் முறைப்படி ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்தான். ஆனால், அவரது சான்றிதழ்களை மட்டும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார். ப்ரியாவின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில்தான் நடந்தது. தவிர, ப்ரியாவின் கணவர் மதப் பிரசங்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாகவே, ப்ரியா வெற்றிபெற்றதும் கிறிஸ்தவ பாதிரியார்களான எஸ்ரா.சற்குணம் உட்பட பலரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தேர்தல் தொடங்கியது முதல் தற்போதுவரை ப்ரியா தனது கணவர் பெயரை பயன்படுத்தாமல், அவரது தந்தை ராஜனின் பெயரை இணைத்து பயன்படுத்தி வருகிறார். தமிழக மீடியாக்களும் இந்த உண்மையை மறைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மையிலேயே ப்ரியா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றால், தனது கணவர் பெயரை வெளியிட்டிருக்கலாமே. இதற்குப் பின்னணியில் தி.மு.க.வைச் சேர்ந்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார். என்றாவது ஒருநாள் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். அப்போது, ப்ரியாவின் குட்டு அம்பலமாகி, அவரது பதவிக்கு ஆபத்து வரும்” என்றார்.

மேயர் ப்ரியா பற்றிய தகவல்கள் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. இதைத் தொடர்ந்து, ப்ரியாவின் உண்மை நிலவரம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலத்தளங்களில் பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். இதை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் சென்னை மேயர் ப்ரியாவின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆகவே, ப்ரியா விவகாரத்தில் உண்மைத் தன்மையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ஓட்டுப்போட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Share it if you like it