பால் வியாபாரி கொலை வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை செங்குன்றம் அருகேயுள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்டது எடப்பாளையம். இங்குள்ள எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் முரளி. 26 வயது இளைஞரான இவர் ஒரு பால் வியாபாரி. இவர், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி ஒரு கும்பலால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அலமாதி சாந்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம், தீபன், திலீபன், நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இக்கொலையில் முக்கிய சூத்திரதாரியான அலமாதி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் கைது செய்யப்படவில்லை. காரணம், ஆளுங்கட்சி பிரமுகர் என்பதோடு, பதவியில் இருப்பதாலும் கைது செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தமிழ்வாணனை கைது செய்ய வலியுறுத்தி, முரளியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதன் பிறகு, பால் வியாபாரி முரளி கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அலமாதி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால், இதையறிந்த தமிழ்வாணன் தலைமறைமாகி விட்டார். இதையடுத்து, அவரை பிடிக்க செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், சோழவரம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸார் தமிழ்வாணனை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த சூழலில், அலமாதி பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தமிழ்வாணன்பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், தமிழ்வாணனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கொலை வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, போதை பொருட்கள் கடத்தல், பதுக்கல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இதிலும், குறிப்பாக தி.மு.க.வினரே இச்செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் றெக்கை கட்டி வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது பால் வியாபாரி கொலை வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.