போதை, கொலை, கொள்ளை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் தமிழகம்!

போதை, கொலை, கொள்ளை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் தமிழகம்!

Share it if you like it

சென்னையில் தனியார் வங்கியில் காவலாளி, ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‘பெட் பேங்க்’ என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இக்கிளைக்கு நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் வந்திருக்கிறார். அப்போது, வங்கியின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், உள்ளே இருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், கதவை திறந்து உள்ளே சென்றிருக்கிறார். அங்கு, ஊழியர்களின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இத்தகவல் உடனடியாக அரும்பாக்கம் போலீஸாருக்கு தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஊழியர்களின் கட்டை அவிழ்த்து விட்டு, விசாரணை நடத்தியபோது, அதே வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் பணிபுரியும் மண்டல மேலாளர் பாடியைச் சேர்ந்த முருகன் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை அரும்பாக்கம் கிளையில்தான் முருகன் மேலாளராக பணியாற்றி இருக்கிறார். இவர், நேற்று வங்கிக்கு வந்திருக்கிறார். இதே வங்கியில் ஏற்கெனவே பணிபுரிந்தவர் என்பதால், அவரிடம் ஊழியர்கள் சகஜமாக பேசியிருக்கிறார்கள்.

அப்போது, காவலாளி சரவணன் மற்றும் ஊழியர்களுக்கு குளிர்பானம் கொடுத்திருக்கிறார். இதை குடித்த சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கமடைந்து விட்டார்கள். இதன் பிறகு, தனது கூட்டாளி ஒருவரை உள்ளே அழைத்து, வங்கி லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 32 கிலோ தங்க நகைகள் மற்றும் பணத்தை பைகளில் அள்ளிக் கொண்டு சென்றிருக்கிறார். இதையடுத்து, பக்கத்து மாவட்ட மற்றும் மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும், முருகனின் செல்போன் எண்ணை வைத்து கண்டறியும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம்தான் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன், ஹெராயின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது வங்கிக் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அப்போதிருந்தே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தற்போது வங்கி கொள்ளையும் இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது. இதனால், தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதோ என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


Share it if you like it