ஏஞ்சல் பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது தாக்கு!

ஏஞ்சல் பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது தாக்கு!

Share it if you like it

திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் மகன் வினோத், பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததை தட்டிக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் என்கிற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தாளாளராக இருப்பவர் சிந்தை ஜெயராமன். இவரது மகன் வினோத் என்பவர்தான் தற்போது பள்ளியை நிர்வகித்து வருகிறார். இந்த சூழலில், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை, கவுன்சிலிங் என்கிற பெயரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று நிரவாகி வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல, ஆசிரியையைகள் பலரிடமும் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, மேற்கண்ட பாலியல் சம்பவத்தை வெளியில் கொண்டுவருவதற்காக, நேற்று மாலை பள்ளி மாணவ, மாணவிகள் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபடுவதுபோல நடித்திருக்கிறார்கள். ஆனால், இதையறியாத பள்ளி நிர்வாகம், மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறது. இதன் பிறகு வீட்டிற்குச் சென்ற மாணவ, மாணவிகள் பாலியல் சீண்டல் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, இன்று காலை பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளித் நிர்வாகி வினோத்தை கைது செய்யக்கோரி பள்ளி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். பின்னர், இது தொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே போலீஸார் பேசியிருக்கிறார்கள். இதனால், பெற்றோர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவர்கள் சிலரை போலீஸார் தாக்கி இருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, தகவலறிந்து கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளி நிர்வாகி வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். இதன் பிறகு, பெற்றோர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக, உறுதியளித்தபடி, பள்ளியின் நிர்வாகி வினோத் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வினோத் தலைமறைவாகி விட்டார். எனவே, அவரது தந்தையும், பள்ளியின் தாளாளருமான சிந்தை ஜெயராமனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். எனினும், நிர்வாகி வினோத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவித்திருக்கிறார். ஆகவே, திருநின்றவூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


Share it if you like it