சிரித்த முகத்துடன் வரவேற்பு: கவர்னரிடம் சரணடைந்த ஸ்டாலின்!

சிரித்த முகத்துடன் வரவேற்பு: கவர்னரிடம் சரணடைந்த ஸ்டாலின்!

Share it if you like it

குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை, ஸ்டாலின் சிரித்த முகத்துடன் பூங்கொடுத்து வரவேற்ற சம்பவம், கவர்னரிடம் ஸ்டாலின் சரணடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்றால் பிரிவினையை தூண்டுவதுபோல உள்ளது. ஆகவே, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். இது தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. இதன் பிறகு, தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் உரையாற்றிய கவர்னர், தமிழக தி.மு.க. அரசு கொடுத்த உரையிலிருந்த பல்வேறு வார்த்தைகளை தவிர்த்துவிட்டுப் பேசினார். இதனால், தி.மு.க. ரொம்பவே கொதிப்படைந்தது. இதன் காரணமாக, கவர்னரை அவன், இவன் ஏக வசனத்தில் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியது.

இதையடுத்து, கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழா தொடர்பான அழைப்பிதழில், தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிட்டிருந்ததோடு, தமிழ்நாடு அரசின் முத்திரையை பதிக்காமல், இந்தியாவின் முத்திரையை பதிந்திருந்தனர். இதனால், மேற்கண்ட பொங்கல் விழாவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரும் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் புறக்கணித்தனர். இந்த சூழலில்தான், நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இன்று காலை சென்னை மெரினாவில் நடந்தது. புரொட்டக்கால் படி முதல்வரான ஸ்டாலின் முதலில் வந்து விட்டார். இதன்பிறகு, கவர்னர் வந்தார். அப்போது, கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து சிரித்த முகத்துடன் வரவேற்றார் ஸ்டாலின்.

பின்னர், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன், ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதை கவர்னருடன் அமர்ந்து பார்வையிட்டார் ஸ்டாலின். பிறகு, தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதையும் இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்வையிட்டனர். அப்போது, இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

அதேபோல, இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்துக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. ஆகவே, தி.மு.க.வும் புறக்கணிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், இந்த தேநீர் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இவ்விரு சம்பவங்களும்தான் கவர்னரிடம் ஸ்டாலின் சரணடைந்து விட்டதாக நெட்டிசன்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.


Share it if you like it