கவர்னருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க. தலைமையிலான அரசுக்கும் ஏழாம் பொறுத்தமாக இருந்து வருகிறது. தி.மு.க.வை பொறுத்தவரை, அக்கட்சி தலைமையிலான அரசு கொண்டுவரும் அனைத்து அவசர சட்டங்களுக்கும், மசோதாக்களுக்கும் கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. உதாரணமாக, ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை உட்பட தற்போதைய ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான அவசரச் சட்டம் வரை கூறலாம். ஆனால், கவர்னர் எதையும் நிதானமாக யோசித்து செயல்பட்டு வருகிறார். இது தி.மு.க. அரசுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. எனவே, கவர்னர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருவதோடு, கவர்னர் பதவியே தேவையில்லை, கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதையெல்லாம் கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என்கிற ரீதியில் தனது கடமையை மட்டும் செய்து வருகிறார்.
அதேசமயம், தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி கவர்னராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனோ, கவர்னர் பதவி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்றும், அதுவும் அரசியலமைப்பில் ஒரு அங்கம் என்றும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர்களின் பேட்டிகளின்போதும் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் நடந்த ‘மோடி@20 – நனவாகும் கனவுகள்’ மற்றும் ‘அம்பேத்கர் & மோதி’ என்ற 2 தமிழ் பிரதி புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “நம் நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்றுதான் சொல்வேன். மற்றவர்களுக்கு பிடித்ததை சொன்னால் கருத்து சுதந்திரம். அதே எனக்கு பிடித்ததை சொன்னால் கருத்து சுதந்திரம் இல்லை என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள். ஒரு கவர்னரை பற்றி விமர்சிக்கும்போது ‘முட்டாள்’, ‘நீ என்ன படிச்ச’, ‘உனக்கு அறிவு இல்லையா, புத்தி இல்லையா’ என்றெல்லாம் எழுதுகிறார்கள். விமர்சனங்கள் செய்ய விரும்பினால், கொஞ்சம் நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள். மோசமாக விமர்சனம் செய்தால், அதன் பிறகு எதற்காக இப்படி செய்தோம் என்பதை உணர்த்தும் அளவிற்கு நடவடிக்கைகள் இருக்கும்” என்று கடுமைகாட்டி இருந்தார்.
இந்த நிலையில், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாளை போற்றுவதில் மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கர் என்னவெல்லாம் கனவு கண்டாரோ, அது இன்று இந்தியாவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த பலன் தான் ஜி-20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குகிறோம் அந்த வகையில் நாம் அவருக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். கவர்னர் விஷயத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். முழுமையாக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது சரியல்ல. கவர்னருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். கவர்னர் தமிழிசையில் இதுபோன்ற அதிரடிகளால் தி.மு.க.வினர் சற்றே ஆடிப்போய்த்தான் இருக்கிறார்கள்.