பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: சென்னையில் நாகூர் மீரான் கைது; ஜாஹிர் உசேன், நவாஸுக்கு ஜாமீன்!

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: சென்னையில் நாகூர் மீரான் கைது; ஜாஹிர் உசேன், நவாஸுக்கு ஜாமீன்!

Share it if you like it

பயங்கவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையைச் சேர்ந்த நாகூர் மீரான் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஒரே இரு சக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை போலீஸார் மடக்கியபோது, தப்பித்துச் சென்று விட்டனர். ஆனால், அவர்களில் ஒருவரது பை மட்டும் கீழே விழுந்து விட்டது. அப்பையை சோதனை செய்த போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அப்பையில் செல்போன், டெம்பர் கிளாஸ் ஆகியவற்றுடன் ஒரு நோட்டும் இருந்தது. அந்த நோட்டில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இருந்திருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் தப்பிச் சென்ற 3 இளைஞர்களைப் பற்றிய விசாரணையில் தீவிரமாக இறங்கினர்.

நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், மூவரும் புது வினோபா நகரைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் (20), நவாஸ் (19), நாகூர் மீரான் (22) என்பது தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் போலீஸார் கைது செய்து ராயபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது, மூவரும் சென்னை பர்மா பஜாரிலுள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. மேலும், இவர்களில் நாகூர் மீரான் இந்திய தேசிய லீக் கட்சியின் பகுதி பொறுப்பாளராக இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 3 பேர் வீட்டிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். நாகூர் மீரான் வீட்டில் நடத்திய சோதனையில் மற்றொரு நோட்டும் கைப்பற்றப்பட்டது.

இந்த நோட்டில் அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தகவல்களை எழுதி வைத்திருந்ததாகவும், வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான செயல்முறை விளக்கத்தை எழுதி வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, நாகூர் மீரான் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்ற இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக, நாகூர் மீரானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் கோவையில் கார் வெடித்துச் சிதறிய விவகாரம் பயங்கரவாத சதி என்று என்.ஐ.ஏ. கூறியிருக்கும் நிலையில், சென்னையில் பயங்கரவாத தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it